Breaking News

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 


ஒரு துறையின் அதிகாரி செய்த முறைகேட்டிற்காக சம்பந்தப்பட்ட அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அந்த துறையின் அமைச்சர் வீட்டை காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தியிருப்பது கீழ்த்தரமான அரசியல் செயலாகும். இது சிபிஐயின் நேர்மையான விசாரணையை திசை திருப்பும் செயலாகும்.

ஒரு பிரச்சனையில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டம், தலைமை செயலக முற்றுக்கை என காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்தி அதை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

கைது செய்யப்பட்ட அதிகாரி நான் பணம் பெற்றது பொதுப்பணித்துறை அமைச்சருக்குத்தான் என எதாவது ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளாரா? எதுவுமே இல்லாமல் திட்டமிட்டு ஒரு அமைச்சரை அச்சுறுத்தி அவருக்கு மனஉளைச்சலை தர வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கட்சியினரோடு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேவலமான அரசியல் ஆகும்.

தனது ஐந்தாண்டு கால கூட்டணி அரசில் தான் முதல்வராக பதவி வகித்தபோது (மின்கேபிள்) புதைவட மின் இணைப்பில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது. அதேபோன்று இலவச அரிசியிலும், இலவச வேட்டிசேலை வழங்கு வதிலும் கமிஷன் பெற்றதால் இலவச அரிசி வழங்கும் திட்டத்தையே அப்போதைய துணை நிலை ஆளுநர் அவர்கள் ரத்து செய்தார்.

பிள்ளைகளுக்கு முட்டை வழங்குவதில் ஊழல் இவையெல்லாம் யாருடைய ஆட்சியில் நடைபெற்றது, பிரசித்தி பெற்ற குயில் தோப்பை தவறாக பத்திரப் பதிவு செய்ய முற்பட்ட போது அப்போதைய சப்ரிஜிஸ்டர், இந்த பத்திரப்பதிவை நடத்த முடியாது என கூறிய பிறகு காரைக்காலில் இருந்து ஒரு சப்ரிஜிஸ்டர் ஒருவரை வரவழைத்து பத்திரப்பதிவு நடத்தப்பட்டது. அதில் முன்னாள் முதலமைச்சர் திரு. நாராயணசாமியின் புதல்வரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இதுபோன்று தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தபோது அதற்கெல்லாம் பொருப்பேற்று திரு. நாராயணசாமி அவர்கள் முதல்வர் பதவியிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாரா?

தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு மேலாக கலால் துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி சிறைவாசம் சென்றதற்காக தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதவி விலகி விட்டாரா? அல்லது திரு.செந்தில்பாலாஜியின் ஊழலுக்கு பொருப்பேற்று திரு. எஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கூட்டணி கட்சியான திமுகவை திரு. நாராயணசாமி வலியுறுத்தியிருப்பாரா?

கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தற்போதைய ஆட்சியாளர்கள் பெருந்தன்மையோடு சமரசம் ஏற்படுத்திக் கொண்டது ஏன் என்பது இப்பொழுது ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும்.

ஏனம் பிராந்தியத்தில் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகார மோதலினால் கடந்த 40 நாட்களாக அங்கு குப்பை வாரப்படவில்லை. ஏற்கனவே, கனகலாப்பேட்டை என்ற இடத்தில் கொட்டப்பட்ட குப்பை கொட்டுவது நீதிமன்ற உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்டது. 

தற்போது அரசுக்கு சொந்தமான கோபால் நகரில் குப்பை கொட்டுவது அரசியல்வாதிகளால் தடுக்கப்பட்டது. ஒரு சில செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளின் தவறான செயலுக்கு அங்குள்ள அதிகாரிகள் துணைப்போவதால் குப்பைகள் வாராப்படாமல் சுற்றுப் புறச்சூழல் கேடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நலன் கருதி ஏனம் பகுதியில் அதிமுக சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது, பந்த் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவு அளித்தனர். அதன்பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, இப்பிரச்சனையில் துணை நிலை ஆளுநர் நேரிடையாக தலையிட்டு ஏனம் பகுதியில் வாரப்படும் குப்பைகள் தகுந்த இடத்தில் கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநில துணைச்செயலாளர் நாகமணி,மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!